தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தல்: அடுத்த மாதம் 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), தமாகா,இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் சேர தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி அடுத்த மாதம் 3 முறை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதனை தொடர்ந்து 6ம் தேதி வேலூரிலும், 11ம் தேதி திருச்சி, தஞ்சாவூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி அதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.