மருத்துவக்கல்லூரி
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது பொதுப்பணித்துறையையும் அவர் கவனித்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.4 ஆயிரத்து 80 கோடி செலவில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டன.
ஆண்டுக்கு 1,450 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் புதிதாக சேரும் வகையிலான இந்த 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தேசிய மருத்துவ கமிஷனின் விதிமுறைகளை மீறி மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட சில காண்டிராக்டர்களுக்கு மட்டுமே கட்டுமான பணி வழங்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வந்தது.
தமிழக அரசு அனுமதி
லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விரிவான விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசிடம், லஞ்ச ஒழிப்பு துறை அனுமதி கோரியிருந்தது. இதனை ஏற்று, மருத்துவக்கல்லூரி முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து, ஊழல் தடுப்புச்சட்டம் 1988 பிரிவு 17 ஏ-ன் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உள்ளது. இந்த பிரிவு, அதிகாரப்பூர்வ பணியில் கடமைகளை நிறைவேற்றும்போது, அரசு ஊழியரால் எடுக்கப்பட்ட பரிந்துரைகள் அல்லது முடிவுகளில் இருந்து உருவாகும் குற்றங்கள் பற்றிய விசாரணையை கையாளுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை உணர்வுப்பூர்வமான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் எடப்பாடி பழனிசாமி தொடர்பான வழக்கை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆதாரம் திரட்டல்
லஞ்ச ஒழிப்பு துறை கோரிய விரிவான விசாரணையை பொறுத்தமட்டில், விசாரணை நடத்துபவர்கள் சாட்சியங்களை பரிசோதித்து, ஆவணங்களை மீளாய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவுக்கு ஆதாரங்களை திரட்டுவது ஆகும்.
இதேபோல, சாலை திட்டங்களிலும் தன்னுடைய உறவினர்களுக்கு அதிகமான ஒப்பந்தங்களை எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்தபோது கொடுத்ததாக எழுந்த புகாரும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.