சென்னை,
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்கள் மத்தியில் உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், உங்களுடைய தந்தையின் கொலையாளிகளை மனித்துவிட்டீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்து பேசுகையில், கொலையால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம், காயம் அடைந்தோம். பல ஆண்டுகளாக கோபத்துடன் இருந்தோம். இருப்பினும், எப்படியோ நாங்கள் கொலையாளிகளை முற்றிலுமாக மன்னித்துவிட்டோம், உண்மையாக நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம், என கூறினார். ராகுல் காந்தியின் பேச்சு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2 லட்சம் தமிழர்களை கொன்ற போது மவுனமாக இருந்தது ஏன்? என ராகுல் காந்திக்கு தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில் ராகுல்காந்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை யாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார். இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தபோது தமிழர் இனத்தையே மொத்தமாக இலங்கையில் அழிப்பதற்கு காரணமாக அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணியான தி.மு.க. ஆட்சியும்தான். இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதற்கு அவர்கள்தான் காரணம். எனவே ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களை அழித்து விட்டு இப்போது அதை பெருந்தன்மை என்று சொல்கிறார் என்றால் இது எப்படி இருக்கிறது என்று நினைத்து பாருங்கள்.
ராகுல் கூறுவதை கமல் ஆதரிக்கிறார் என்றால் தமிழர்களை படுகொலை செய்த தி.மு.க.வை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது காங்கிரசை பெருந்தன்மை என்கிறாரா? இதை நியாயப்படுத்துகிறாரா? கேள்வி: ராகுல் இதை அரசியல் பண்ணுவதாக கருதுகிறீர்களா? பதில்:- எல்லோரையும் அழித்து விட்ட பிறகு அவர் சொல்வதை பார்க்கும்போது அரசியலுக்காகத்தான் சொல்கிறார். வேறு எதற்காக சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.