சென்னை,
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்று இருந்தனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு 8-ந்தேதி (இன்று) நடைபெற இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது, அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கான பதிவெண், வேறொரு தேர்வு மையத்தில் இருந்ததாக கூறப்பட்டது. பதிவெண் இல்லாததால், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். அத்துடன், அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சென்னையில் மட்டும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தமிழகம் முழுவதும் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;
”சென்னையில் இன்று 08.02.2026 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும்) IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் (ம) பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாரறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும்.
இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail மூலம் தகவல் அளிக்கப்படும்.
எதிர்வரும் 22.02.2026 மு.ப நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II பணிகள்) பொது அறிவு தேர்வு (தாள்-II) (Descriptive Type) அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மீண்டும் 13.02.2026 அன்று வழங்கப்படும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.