சென்னை,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வு ஒத்தி வைப்பு – லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
இன்று நடைபெறவிருந்த சார்பதிவாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும், ஹால்டிக்கெட் வழங்கியதிலும் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுப்பணி எனும் கனவை நினைவாக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு,பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், முறையான திட்டமிடலின்றியும், சரியான ஏற்பாடுகளின்றியும் தேர்வை நடத்த முயற்சித்திருக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மீதான செயல்பாடு தேர்வர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் 187வது வாக்குறுதியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.50 லட்சம் இளைஞர்கள் நிரப்பப்படுவார்கள் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் அப்பணிகளுக்கான தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாமல் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, குரூப்2, குரூப்2ஏ தேர்வில் குளறுபடிகள் ஏற்படும் அளவிற்கு அலட்சியமாக இருந்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து விதமான ஏற்பாடுகளோடு இத்தேர்வை மீண்டும் நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.