தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: அடுத்து சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்? பரபரப்பு தகவல்கள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக போலீஸ்காரர் சித்தாண்டியிடமும், இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் பல முக்கிய புள்ளிகள் சிக்கப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்குகள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் ஓம்காந்தன், மாணிக்கவேலு, போலீஸ்காரர்கள் முத்துக்குமார், பூபதி, சித்தாண்டி மற்றும் முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் உள்பட மொத்தம் 32 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கைது வேட்டை நடக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். ஒரு நாள் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இடைத்தரகர் ஜெயக்குமார் நேற்று சி.பி.சி.ஐ.டி. வழக்குகளை விசாரிக்கும் எழும்பூர் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

அப்போது போலீஸ் காவலில் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று அவர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டிடம் கெஞ்சலாக கூறினார். நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே காவலில் வைத்து போலீஸ்காரர் சித்தாண்டியையும், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏராளமானோரை அரசு வேலையில் ஜெயக்குமார் சேர்த்துவிட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தனும் ஜெயக்குமாரும் இணைந்துதான் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளனர். இவர்களது பின்னணியில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஜெயக்குமாரிடமும், ஓம்காந்தனிடமும் நடத்தும் விசாரணை அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் சிலரும், முக்கிய அரசியல் புள்ளிகள் சிலரும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு