தமிழக செய்திகள்

வேலூர் அருகே சென்னை வியாபாரிகளிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

வேலூர் அருகே சென்னை வியாபாரிகளிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த போலீஸ் சீருடையில் வந்தவர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் நடராஜன் (வயது 45), செல்வம் (35). இருவரும் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். மேலும் மண்ணிவாக்கத்தில் மாட்டு பண்ணையும் வைத்துள்ளனர். இந்த நிலையில் நடராஜன் ரூ.5 லட்சம் பணத்துடன் செல்வம், ராஜா ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு வேலூர் மாவட்டம் பொய்கையில் உள்ள மாட்டுச்சந்தைக்கு செல்ல காரில் புறப்பட்டு சென்றனர்.

பொய்கை வந்ததும் அங்கு காரை நிறுத்திவிட்டு ராஜாவும், செல்வமும் காருக்கு வெளியேயும், பணம் இருந்ததால் நடராஜன் காருக்குள்ளேயும் படுத்துக்கொண்டனர். அப்போது ரோந்து பணியில் இருந்த விரிஞ்சிபுரம் போலீசார் அவர்களிடம் விசாரித்துவிட்டு பணத்தை பத்திரமாக வைத்துக்கொண்டு உஷாராக இருக்கும்படி அறிவுறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

போலீஸ் சீருடையில்...

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு பொய்கை மாட்டு சந்தைக்கு 3 பேரும் சென்றபோது அவர்களுக்கு தேவையான கறவை மாடுகள் கிடைக்கவில்லை. இதனை அறிந்த அங்கு இருந்த மாட்டு இடைத்தரகர் குமார் என்பவர் பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவானம் பகுதியில் அதிக அளவில் கறவை மாடுகள் உள்ளது. நான் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

இதையடுத்து குமார் உள்பட 4 பேரும் காரில் புறப்பட்டு வெட்டுவானத்திற்கு சென்றனர். இவர்கள் நின்றிருந்த கார் அருகே மற்றொரு கார் வந்து நின்றது. அந்த காரில் போலீஸ் சீருடையில் ஒருவரும், 3 பேர் சாதாரண உடையிலும் இருந்தனர். அவர்கள் மாடு வாங்க வந்த 3 பேரையும் விசாரித்தனர்.

ரூ.5 லட்சம் அபேஸ்

இதையடுத்து போலீஸ் உடையில் இருந்தவர் உள்பட 4 பேரும் நீங்கள் மாடு வாங்குபவர்கள் மாதிரி இல்லையே, சாராய வியாபாரி மாதிரி உள்ளர்கள் என கூறிக்கொண்டே காரை சோதனை செய்தனர். அப்போது, காரின் பின்புற சீட்டில் ரூ.5 லட்சம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து இது எப்படி வந்தது? இதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டு ரூ.5 லட்சத்தையும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் மாட்டு வியாபாரிகளிடம் நீங்கள், காவல் நிலையத்திற்கு வந்து ஆதாரத்தை காட்டிவிட்டு பணத்தை பெற்று செல்லுங்கள் என கூறிவிட்டு இடைத்தரகர் குமாரை மட்டும் அவர்கள் வந்த காரில் அழைத்து கொண்டு புறப்பட்டு சென்று விட்டனர். இதையடுத்து வியாபாரிகள் 3 பேரும் தாங்கள் வந்த காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர்.

5 பேருக்கு வலைவீச்சு

முன்னால் சென்ற கார் அவர்கள் கண்ணில் இருந்து மறைந்தது. இதன்பின்பு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது 3 பேருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இடைத்தரகர் குமார் உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்