சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இரு பேராசிரியைகள் மாணவியை மிரட்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
கல்லூரிகளில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று அஞ்சி நடுங்கும் வகையில் தான் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் நடந்துள்ள நிகழ்வுகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் எண்ணிக்கை இப்போது தான் அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் இருப்பதாக அறிந்தால், பெரும்பான்மையான பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்குவார்கள். அது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமையும். எனவே, பேராசிரியர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில மனித விலங்குகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வித்துறையில் கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வருவதன் மூலம் கல்விக்கூடங்களை பாதுகாப்பு நிறைந்த கல்விக்கோவில்களாக மாற்ற வேண்டும். அப்போது தான் மகளிர் சமுதாயம் கல்வி கற்று முன்னேற்றப் பாதையில் பயணிப்பார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான சூழலில் பெண்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.