சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மெட்ரோ ரெயில் திட்டம்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரெயில் தங்களது பிள்ளை என்கிறார். தத்தெடுத்த பிள்ளையை அனாதையாக அம்போ என்று விட்டுவிட்டார்கள். பின்பு அதை தூக்கி சீராட்டி, பாராட்டி, இன்று ஓடவிட்டது தற்போதைய மத்தியமாநில அரசுகள் என்பதை மறுக்க முடியாது.
மு.க.ஸ்டாலின் அடியெடுத்து வைத்துவிட்டு அங்கேயே நின்றுவிட்டார். அதை இன்று அடி அடியாக ஓடவிட்டிருப்பது இன்றைய மத்திய, மாநில அரசுகள்தான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். தி.மு.க. அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு வெறும் 1,103 கோடி ரூபாய் அளித்துவிட்டு சும்மா இருந்துவிட்டார்கள். வேண்டிய தொகையை அளித்து விரைவுபடுத்தியது, மத்திய அரசின் சாதனையே, எதையுமே காலம் குறிப்பிட்டு, குறிப்பிட்ட காலத்தில் நிறைவடையச் செய்வதுதான். அதில் மெட்ரோ ரெயில் திட்டமும் அடங்கும்.
ரூ.1,500 கோடி திட்டங்கள்
அதேபோல், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தலைமைச்செயலகத்தில் நடத்திய கூட்டத்தை குறை கூறுகிறார்கள். அவர் மத்திய அரசின் அதிகாரிகளை அழைத்து வந்து மாநில அரசு அதிகாரிகளோடு இணைந்து அமர்ந்து சுமார் 1,500 கோடி ரூபாய்க்கான தமிழகத்தில் உள்ள திட்டங்களை உடனே நடைமுறைப்படுத்துவதற்கு அறிவித்திருக்கிறார்.
தமிழக மக்களும், இளைஞர்களும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் போன்ற அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் 1,500 கோடி ரூபாய் திட்டம் கண்ணுக்கு தெரியாது. கூட்டம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இதுவே இவர்களின் விஷமத்தனமான சுயநல போக்கு அரசியல்.
ஏன் இதற்கு முன்னால் இத்தகைய நடைமுறை இருந்ததா என்று கேட்கிறார்கள். இதற்கு முன் வெள்ளத்தினால் சென்னை தத்தளித்தபோது, இதேபோல் ஒரு கூட்டம் மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவுடன் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது என்பது உண்மை.
நடந்தது அரசியல் கூட்டமல்ல. தமிழக மக்களுக்கு அவசியமான கூட்டம் என்பதை மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவே தெளிவுபடுத்தியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.