சென்னை,
இ-பாஸ் முறைக்கு பதிலாக, இ-பதிவு முறை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட இ-பதிவு செய்தால்தான் வாகனங்களில் போக முடியும். சென்னையில் இ-பதிவு செய்யாமல் வாகனங்களில் சென்றால் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள்.
இதில் டாக்டர்கள், சுகாதார துறையினர், பத்திரிகை ஊடக த்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய-மாநில அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் வக்கீல்கள் போன்ற முன்களப்பணியாளர்கள் பணிநிமித்தமாக சென்றால், அவர்கள் இ-பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மேற்கண்ட துறையினர் அவர்களது அடையாள அட்டையை காட்டினால் போதும். போலீசார் அவர்களது வாகனங்களை அனுமதிக்க வேண்டும். சென்னையில் மேற்கண்ட துறையினரிடம் இ-பதிவு செய்ய வேண்டும் என்று வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் தகராறு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதாக புகார்கள் வந்தன.
எனவே மேற்கண்ட துறையினர், போலீசார் ஏதாவது கெடுபிடி காட்டினால், அவர்களுக்கு உதவி செய்ய கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும், மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட துறையினர் ஏதாவது உதவி தேவைப்பட்டால், மக்கள் தொடர்பு உதவி கமிஷனரை 94981 30011 என்ற செல்போன் எண்ணிலும், 044-23452 320 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டால் உடனடியாக உரிய உதவி கிடைக்கும். இந்த தகவல் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முன்களப்பணியாளர்கள் எங்கு சென்றாலும், அவர்களிடம் இ-பதிவு விவரத்தை கேட்கக்கூடாது என்றும், அவர்களது அடையாள அட்டைய காட்டினாலே போதும், அவர்களது வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. திரிபாதியும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.