சென்னை,
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
உரிய அங்கீகாரம் பெறாமல் பள்ளிகளை நடத்துவது இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி சட்டத்தை மீறிய செயல் என்பதை கருத்தில்கொண்டு, பள்ளிகள் உள்ளாட்சி அமைப்பிடம் பள்ளி கட்டிட வரைபட அனுமதி பெற்றிருந்தாலும், அந்த பள்ளிகள் நகர் மற்றும் ஊரமைப்புத்துறை, உள்ளூர் திட்டக்குழுமம், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் கட்டிட வரைபட அனுமதி பெற்று சமர்ப்பிக்கவேண்டும். அதற்கு 31.5.2020 வரை கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கி ஆணையிடப்பட்டது.
சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதியுதவி பெறும் அனைத்துவகையான பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றுக்கு 31.5.2022 வரை தொடர் அங்கீகாரம் நீட்டித்து வழங்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அனுமதி ஆணை வழங்கக்கோரியுள்ளார்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, இந்த பள்ளிகள் அரசால் வெளியிடப்படும் கட்டிட வரன்முறை சார்ந்த சிறப்பு திட்டங்களை பயன்படுத்தி தங்களுடைய கட்டிடத்தினை முறைப்படுத்த கட்டாயமாக விண்ணப்பித்து கட்டிட அனுமதிபெறவேண்டும். இதற்குமேல் வாய்ப்பு ஏதும் வழங்க இயலாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 1.6.2020 முதல் 31.5.2022 வரை 2 ஆண்டுகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.