சென்னை,
வரலாறு காணாத வகையில் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. ஏரி, குளங்கள் வற்றி குடிநீருக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது. தண்ணீருக்காக இரவு, பகல் பாராமல் பொதுமக்கள் காலி குடங்களுடன் வீதிகளில் சுற்றி திரிகின்ற காட்சிகளை தினமும் பார்க்க முடிகிறது. தண்ணீர் கேட்டு பல இடங்களில் பொதுமக்கள் குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதற்கிடையே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் தேவையை போக்கிட போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 24-ந்தேதி (நாளை) சென்னை சேப்பாக்கத்தில் தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.