சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தற்போது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 63691-00100 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் பேசி பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தநிலையில் பொதுமக்கள் வாட்ஸ்-ஆப் கால் மூலம் பேசி அந்தந்த பகுதி துணை கமிஷனர்களிடமும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் துணை கமிஷனர்களை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்களிடம் பொதுமக்கள் தொடர்புக்கொண்டு பேச தனித்தனி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பரங்கிமலை-70101 10833, அடையாறு-87544 01111, தியாகராயநகர் -90030 84100, மயிலாப்பூர்-63811 00100, திருவல்லிக்கேணி-94981 81387, கீழ்பாக்கம் -94980 10605, பூக்கடை-94980 08577, வண்ணாரப்பேட்டை -94981 33110, மாதவரம்-94981 81365, புளியந்தோப்பு -63694 23245, அண்ணாநகர் -91764 26100, அம்பத்தூர் -91764 27100.
மேலும் புதிய அறிவிப்பு ஒன்றும் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 63691 00100 என்ற செல்போன் எண்ணில் பொதுமக்கள் வாட்ஸ்-ஆப் வாயிலாக போலீஸ் கமிஷனருக்கு புகார்களை சுருக்கமாக அனுப்பி வைக்கலாம் என்றும், அந்த புகார்கள் முக்கியமாக இருக்கும் பட்சத்தில் புகார்களை அனுப்பியவர்களிடம் போலீஸ் கமிஷனர் வாட்ஸ்-ஆப் காலில் தொடர்புக்கொண்டு பேசுவார் என்றும், சாதாரண புகார்கள் குறிப்பிட்ட துணை கமிஷனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.