சென்னை,
ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்கள் சிலர் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஆசிரியர்கள் தற்போதைய நிலை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரனை சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த தகவலை நீதிபதியின் கவனத்துக்கு, வக்கீல்கள் சிலர் கொண்டு வந்தனர். விமர்சனம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.கிருபாகரன், சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்கள் யார்? என்பதையும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, சைபர் கிரைம் போலீஸ் பிரிவை பலப்படுத்த தமிழக அரசு ரூ.10 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, இது தொடர்பான அறிக்கையை வருகிற 28-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர், சைபர் கிரைம் குற்றங்கள் இப்போது பெருகிவிட்டது. நாட்டின் பொருளாதார, பாதுகாப்புக்கு இந்த சைபர் கிரைம் குற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு நாளும் தகவல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப, சைபர் கிரைம் பிரிவிலும், நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், நீதிபதியை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் செய்யப்பட்டது. புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று கூறினார். இதையடுத்து, இதுகுறித்தும் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.