தமிழக செய்திகள்

பராமரிப்பு-பயணிகள் சேவைக்காக எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

பராமரிப்பு பணி மற்றும் பயணிகளின் சேவைக்காக, சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சார்பில் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தர நிர்ணய சான்று வழங்கி சிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் முக்கியமான மற்றும் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையம். இது தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பல ரெயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூர் ரெயில் நிலையம் ஆங்கிலேயரால் கட்டப்பட்டு 1908-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பழமையான ரெயில் நிலையம் என பல சிறப்புகளை பெற்றுள்ளது. இந்தநிலையில் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு தென் இந்தியாவில் சிறந்த ரெயில் நிலையம் என, எழும்பூர் ரெயில் நிலையத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

ரெயில்கள் இயக்கம், சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காகவும், ரெயில் நிலைய பராமரிப்பு, டிக்கெட் முன்பதிவு, பயணிகளுக்கான சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.

மேலும் பார்சல்களை கையாள்வதிலும் எழும்பூர் ரெயில் நிலையம் தென் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சர்வதேச தரநிர்ணய சான்று (ஐ.எஸ்.ஓ.14001:2015) வழங்கி சிறப்பித்துள்ளதாக தெற்கு ரெயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது