தமிழக செய்திகள்

சட்டப் பேரவைக்கு தினகரன் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது-ஜெயக்குமார்

எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார் அப்போது சட்டப் பேரவைக்கு தினகரன் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறினார். #Jayakumar #ADMKMLA

சென்னை

தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.

இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதில் 100 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். சொந்த காரணங்களின் காரணமாக 7 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, பாஸ்கர் ஆகிய 3 பேரும் கலந்து கொள்ளவில்லை.

செல்லூர் ராஜூ சபரி மலைக்கு மாலை அணிந்திருப்பதால் கூட்டத்திற்கு வரவில்லை என்றும், கடம்பூர் ராஜூ, பாஸ்கர் ஆகியோர் வேலுநாச்சியார் விழா ஏற்பாடுகளுக்காக வரவில்லை என்றும் கூறப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் ஆறு குட்டி, சிவசுப்பிரமணியம், பிரபு, பவுன்ராஜ் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து அ.தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் 8.1.2018 அன்று மேதகு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி; கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் இன்று காலை (3.1.2018 - புதன் கிழமை), கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆளுநர் உரைக்கான சட்டமன்றக் கூட்டத் தொடரில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி; கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள் என கூறப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டத்தில் உறுப்பினர்கள் சட்டப்பேரவை மரபுகளை மீறாமல் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சட்டப்பேரவைக்கு தினகரன் வருவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆலோசனை கூட்டத்தில் 104 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

#ADMK | #OPS-EPS | #TtvDhinakaran | #ADMKMLA | #Jayakumar

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்