சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி முடிவடைந்தது. இந்தநிலையில் தேர்தல் நடந்த அன்றைய தினம், வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92-ல் நடந்த வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வி.வி.பேட் எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் வைத்து தேர்தல் பணியாளர்கள் எடுத்து சென்றனர்.
அப்போது பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வாங்கியது.
அந்த அறிக்கையில், அந்த வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படாத எந்திரம் என்றும், ஆனால் வி.வி.பேட் எந்திரம் மட்டும் பயன்படுத்தப்பட்டு, அதில் 15 வாக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த பிரச்சினை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்திருந்தது. அந்தவகையில் வேளச்சேரி தொகுதியில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வேளச்சேரி தொகுதியில் 92-வது வாக்குச்சாவடி மையத்தில் பெறப்பட்ட வாக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வேளச்சேரி தொகுதி சீதாராம் நகரில் உள்ள டி.ஏ.வி பப்ளிக் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லத்தக்கதல்ல என்றும், வருகிற 17-ந்தேதி அதே வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் மாட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால், இங்கு கடந்த முறை அனுமதிக்கப்பட்ட 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்காளர்களுக்கு ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டிருந்ததால், இந்த மறு வாக்குப்பதிவின் போது வாக்களிக்கும் நபர்களின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படுகிறது.
மறு வாக்குப்பதிவுக்கு புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
அதன்படி ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த திருவான்மியூரில் இருந்து வாக்குச்சாவடிக்கு புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்படும். பின்னர் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குப்பதிவு எந்திரம், வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் போது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த இருக்கும் புதிய வாக்குப்பதிவு எந்திரத்தை குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
அந்த பகுதியில் ஆட்டோக்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வழியாகவும் மறு வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. மேலும், வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துபூர்வமாக கடிதம் வழங்கி வருகின்றனர். மேலும் எழுத்துபூர்வமாக கடிதம் வழங்குபவர்களுக்கு மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.