சென்னை,
கவிஞர் வைரமுத்து நிறுவன தலைவராக உள்ள வெற்றி தமிழர் பேரவை சார்பில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், இந்து குழும தலைவர் என்.ராம், சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டு கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:- பள்ளிப் பருவத்தில் திருவாரூர் கமலாலயத்தின் நீண்ட பெருங்குளத்தை நீந்திக்கடப்பதென்று கருணாநிதியும் அவர் நண்பரும் நீந்துகிறார்கள். பாதி தூரம் கடந்ததும் களைத்துப்போன நண்பர் நீந்தமுடியாது கரைக்கே திரும்பிப்போகலாம் என்கிறார். கடந்து வந்த தூரம் பாதி; கடக்க வேண்டிய தூரம் மீதி. எனவே திரும்பிச்சென்று தோல்வி காண்பதைவிட மறுகரையை தொட்டு வெற்றிபெறலாம் என்று கருணாநிதி தொடர்ந்து நீந்தி வெற்றிபெற்றார். நண்பரையும் வெற்றிபெற வைத்தார்.
கருணாநிதியின் இந்த விடாமுயற்சி தான் தானும் வென்று தமிழ்நாட்டையும் வெற்றிபெற வைத்தது. கருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இந்த போர்க் குணம் தான்.
மாற்றி யோசியுங்கள்- கருணாநிதி சொல்லும் இரண்டாம் பாடம் இது. அந்தக்கால திரைப்பட வசனத்தில் சமஸ்கிருதத்துக்கு மத்தியில் கொஞ்சம் தமிழும் கிடந்தது. சத்திரிய பாத்திரங்களும் பிராமண மொழியே பேசிக்கொண்டிருந்தன. கருணாநிதி மாற்றி யோசித்தார். திரைப்பட கொட்டகைக்குள் தேன்மழை பொழிந்தது.
அறிவை பொதுவுடைமை செய்- கருணாநிதி சொல்லிச்செல்லும் அடுத்த பாடம் இது. தான்பெற்ற அறிவை பாமரர்களுக்கு அள்ளித்தெளித்து அவர்களை ஆளாக்கியது கருணாநிதியின் கைவண்ணம். 3 கோடி மக்களும் வெறும் 19 விழுக்காடு கல்வி அறிவும் கொண்ட அன்றைய தமிழ்நாட்டை கலைவழியே கல்விக்கூடமாக மாற்றிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.
பதவி என்பது கிரீடம் அல்ல; அது அன்றாடங்காய்ச்சிகளுக்கான அமுதசுரபி இது கருணாநிதியின் அடுத்த பாடம். சமூகநீதி, குடிசைமாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு, தாழ்த்தப்பட்டோருக்கு நில ஒதுக்கீடு, இலவச கல்வி, தமிழுக்கு செம்மொழி பெருமை இவையனைத்தும் அவர் பெய்த பெருமழையில் சில துளிகள் என்று சொல்லலாம்.
துன்பங்களை உரமாய் போடு கருணாநிதி வாழ்க்கை பேசிப்போகும் இன்னொரு பாடம் இது. இந்தி எதிர்ப்பு போராட்டம், பாளையங்கோட்டை சிறைச்சாலை, எம்.ஜி.ஆர். பிரிவு, நெருக்கடி நிலையின் சவுக்கடி, 13 ஆண்டுகள் ஆட்சி இல்லாத ஒரு கட்சி என்று எல்லா துயரங்களையும் தன் எதிர்காலத்திற்கான எரிபொருளாக்கிக் கொண்டார் கருணாநிதி.
கருணாநிதியின் நினைவை போற்ற வேண்டும். திருவாரூரில் இயங்கும் மத்திய பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் விவேக் கூட்டத்தில் நடிகர் விவேக் பேசியதாவது:- இயக்குனர் பாக்யராஜ் தி.மு.க.வில் சேர்ந்தபின்னர், தனது மகளை கதாநாயகியாக அறிமுகம் செய்து பாரிஜாதம் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தை பாராட்டி ஆனந்த விகடனில் விமர்சனம் எழுதினேன். ஒரு நாள் காலை 7 மணிக்கு எனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ஹலோ நான் கலைஞர் பேசுகிறேன் என்று குரல் ஒலித்தது. அப்போது யாரோ மிமிக்ரி செய்கிறார்கள் என்று நினைத்து போனை கட் பண்ணினேன். மறுபடியும் போன் வரவே, மீண்டும் கட் பண்ணிவிட்டேன்.
காலை 7.30 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேசினார். முதல்-அமைச்சர் 2 முறை உங்களை தொலைபேசியில் அழைத்தும், நீங்கள் கட் பண்ணிவீட்டீர்களாமே? முதல்-அமைச்சர் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று கூறி கலைஞரிடம் தொலைபேசியை கொடுத்தார். அவர் என்னிடம், பாக்யராஜ் படத்தை பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன் பாராட்டுவதுதான் பண்பாட்டின் அடையாளம் என்று பாராட்டினார்.
பிற்பகல் 3 மணிக்கு என் வீட்டுக்கு ஒருவர் வந்து முரசொலி நாளிதழை கொடுத்துவிட்டு சென்றார். அதில், எனது கட்டுரையை சுட்டிக்காட்டி கருணாநிதி பாராட்டியிருந்தார். சிறிது நேரத்தில், சண்முகநாதன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முரசொலி படித்தீர்களா? என்றார். அதற்கு நான் ஆமாம் என்றேன். மாலை 5.30 மணிக்கு உங்களுக்கு முதல்-அமைச்சருடன் அப்பாயின்ட்மென்ட் என்று கூறி போனை வைத்தார்.
நான் முதல் முறையாக கருணாநிதியை சந்தித்தேன். என்னிடம் 2 மணி நேரம் பேசினார். கருணாநிதி வாழ்க்கையில் இருந்து அவருடைய கடின உழைப்பையும், அயராத முயற்சியையும் இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ராசாத்தி அம்மாள், மு.க.தமிழரசு, சண்முகநாதன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோகுல கிருஷ்ணன், மோகன், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், பழனி ஜி.பெரியசாமி, நடிகை குஷ்பு, தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேடையில் இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.