சென்னை,
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்ற நிலையில் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது தொற்று பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. நாளை மறுநாள் முதல் மேலும் தளர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தொற்று குறைவாக இருக்கும் மாவட்டங்களில் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா அதிகரித்தபோது பயணிகள் வருகை குறைந்ததால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை மீண்டும் நாளை முதல் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பயணிகள் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்ட கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.
* சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்: 06865), எழும்பூர்-கொல்லம் (06101), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருவனந்தபுரம் (02695), எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஆலப்புழா (02639), எம்.ஜி.ஆர் சென்டிரல்-மேட்டுப்பாளையம் (02671), எழும்பூர்-ராமேஸ்வரம் (06851), கோவை-நாகர்கோவில் (02668), திருவனந்தபுரம்-மதுரை (06343), மதுரை-புனலூர் (06729), திருச்சி-எழும்பூர் (02654) ஆகிய தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 20-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
* தஞ்சாவூர்-எழும்பூர் (06866), கொல்லம்-எழும்பூர் (06102), திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (02696), ஆலப்புழா-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02640), மேட்டுப்பாளையம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (02672), ராமேஸ்வரம்-எழும்பூர் (06852), நாகர்கோவில்-கோவை (02667), மதுரை-திருவனந்தபுரம் (06344), புனலூர்-மதுரை (06730), எழும்பூர்-திருச்சி (02653) ஆகிய தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 21-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அதாவது நேற்று 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவையில் மட்டும் நேற்று ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதேபோல் சென்னையில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்தது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 63 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4,882 ஆண்கள், 3,751 பெண்கள் என மொத்தம்8 ஆயிரத்து 633 பேருக்குபுதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், 12 வயதுக்கு உட்பட்ட 286 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,286 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 1,089 பேரும், ஈரோட்டில் 964 பேரும், சேலத்தில் 541 பேரும், சென்னையில் 492 பேரும், திருப்பூரில் 481 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 66 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 25 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 8 ஆயிரத்து 101 ஆண்களும், 9 லட்சத்து 98 ஆயிரத்து 358 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 6 ஆயிரத்து 497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 87 ஆயிரத்து 38 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 46 ஆயிரத்து 445 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 142 பேரும், தனியார் மருத்துவமனையில் 145 பேரும் என 287 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 48 பேரும், கோவையில் 30 பேரும், சேலத்தில் 23 பேரும், திருப்பூரில் 19 பேரும், வேலூர், திருப்பத்தூரில் தலா 15 பேரும், திருச்சியில் 13 பேரும், ஈரோட்டில் 12 பேரும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மதுரையில் தலா 10 பேரும் என நேற்று மட்டும் 33 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் கோவையில் 15 வயது சிறுவன் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த 8-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 11-ந்தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களில் 67 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 30 ஆயிரத்து 835 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 17 ஆயிரத்து 173 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 7 ஆயிரத்து 470 பேரும், ஐ.சி.யு படுக்கைகளில் 6 ஆயிரத்து 578 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று 33 ஆயிரத்து 512 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 328 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 3 ஆயிரத்து 934 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 63 ஆயிரத்து 774 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 13 ஆயிரத்து 502 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்தவகையில் 56 ஆயிரத்து 874 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,860 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 2,237 பேரும், சென்னையில் 1,762 பேரும், திருப்பூரில் 2,591 பேரும், சேலத்தில் 956 பேரும், ஈரோட்டில் 1,266 பேரும் அடங்குவர். இதுவரையில் 22 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 89 ஆயிரத்து 9 பேர் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.