சென்னை,
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மரக விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் சல்வது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து கார்த்திகை 1-ந்தேதியான இன்று(புதன்கிழமை) அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
அதன்படி, அனைத்து மாவட்டத்திலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து விரதம் தொங்குகிறார்கள். இதில் மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.
கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் 'சாமியே சரணம் அய்யப்பா' என்ற சரணகோஷம் ஒலிப்பதை கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.