சென்னை,
குடியரசு தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
குடியரசு தினம்
சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே தமிழக அரசு சார்பில் இன்று காலை 8 மணிக்கு குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அமர்வதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழாவின்போது தேசியக்கொடியை கவர்னர் ஏற்றி வைப்பதுதான் வழக்கம். மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் குடியரசு தினத்தன்று மராட்டிய மாநிலத்தில் தேசியக் கொடி ஏற்றுகிறார்.
இதனால் தமிழகத்தில் நடக்கும் விழாவில் அவர் கலந்துகொள்ள இயலாது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், ஐகோர்ட்டு வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
இதுவரை இல்லாத நிகழ்வு
எனவே தமிழகத்தில் இதுவரை இல்லாத நிகழ்வாக தேசியக்கொடியை முதல்அமைச்சர் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி தேசியக்கொடியை இன்று முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுகிறார். பின்னர் முப்படை அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்.
இதற்காக முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 7.31 மணிக்கு போர் நினைவுச் சின்னத்துக்கு வருகிறார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அவரை தொடர்ந்து முப்படைத் தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
கொடி ஏற்றுகிறார்
பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து வரும் தமிழ்நாடு போலீசார் புடைசூழ 7.54 மணியளவில் விழா மேடைக்கு முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிறார். அங்கு அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார். பின்னர் 8 மணிக்கு தேசியக் கொடியை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுகிறார்.
அப்போது வானில் பறந்தபடி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வாழ்த்து தெரிவிக்கப்படும். மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்படும். முப்படை அணிவகுப்பு மரியாதையை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து முப்படையினரின் பீரங்கி, சிறிய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை ஊர்திகள் மூலம் மக்கள் பார்வைக்கு வரிசையாக கொண்டுவரப்படும்.
அலங்கார ஊர்திகள்
அதுபோல் தமிழக போலீஸ் பிரிவுகளின் அணிவகுப்பு நடத்தப்படும். தமிழக அரசின் ஒவ்வொரு துறையின் சார்பில் சாதனை மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நாட்டியம், இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டுகிறார்கள்.
வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணா பதக்கங்களை விழாவில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குகிறார்.
பலத்த பாதுகாப்பு
மெரினா கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதற்கான சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் கலைந்து செல்ல மறுத்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தும்போது மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது.
போலீசாரின் வாகனங்கள் மீது கல்வீச்சு, தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். அதன்பின்னர் மெரினா பகுதியில் கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடி குடியரசு தின விழாவின்போது இடையூறு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஐ.ஜி. தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
கடல் வழியாக யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக இந்திய கடலோர பாதுகாப்புப் படை, தமிழக கடலோர காவல்படை ஆகியவையும் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.