தமிழக செய்திகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை தண்ணீருக்குள் மூழ்கடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாவட்டம், வாலாஜா பாக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் காவியா (வயது 32). இவருக்கும், ராணிப்பேட்டை சிப்காட் வ.உ.சி. நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன் தருண் (4). கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காவியா வாலாஜா பாக்குப்பேட்டையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தாய் வீட்டில் இருந்த காவியாவுக்கும், ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரைசேர்ந்த தியாகராஜன் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த தியாகராஜனின் தாயார், இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் வாலாஜாவில் உள்ள பெல்லியப்பா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். மகன் தருணையும் கள்ளக்காதலன் வீட்டில் வைத்து காவியா வளர்த்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் தருணை பிடிக்காமல் அவனை தியாகராஜன் கொடுமைப்படுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி மகன் என்றும் பாராமல் தருணை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து காவியா முடிவு செய்தார். அதன்படி சிறுவன் தருணை கடந்த 13-ந் தேதி காவியாவும், தியாகராஜனும் சேர்ந்து தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் அமுக்கி கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஆற்காடு அருகே பாலாற்றில் உள்ள டெல்லி கேட் பகுதியில் யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை புதைத்துவிட்டு சென்றுள்ளனர்.

சிறுவன் தருண் எங்கே என காவியாவிடம் உறவினர்கள் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக காவியாவிடம் வாலாஜா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தருணை கொன்றதை காவியா ஒப்பு கொண்டார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். தலைமறைவான தியாகராஜனை போலீசார் தேடிவருகிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை