தமிழக செய்திகள்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதியன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. கடந்த 19-ந் தேதியன்று 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்தது.

ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறு தினம் (வியாழக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

ஒரு மையத்துக்கு 14 மேஜை என்ற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, லயோலா கல்லூரி (மத்திய சென்னை), ராணி மேரி கல்லூரி (வட சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (தென் சென்னை) ஆகிய 3 மையங்களில் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னை மையங்களில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிப்பர். பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுவார்கள்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு சட்டமன்றத்துக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (வி.வி.பி.ஏ.டி.) என்ற வகையில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் (6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

ஒவ்வொரு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

தபால் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் மேஜை போடப்பட்டு அவை எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையில் துரிதம் காட்டுவதைவிட, துல்லியமாகவும், சரியாகவும் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் நடந்ததுபோல, இந்த முறை விரைவாக முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்