தமிழக செய்திகள்

முடிந்தால் என் மீது கை வையுங்கள்: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

சென்னை பாரிமுனை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெகவினரை ஆளும் திமுக தரப்பினர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை த.வெ.க. நிர்வாகிகள் சர்வே எடுத்து வருகிறார்கள். அதன்படி சென்னை துறைமுகம் தொகுதியில் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவு எப்படி இருக்கிறது? என்பது உள்பட கேள்விகளுடன் த.வெ.க.வை சேர்ந்த 5 பேர் பாரிமுனை அங்கப்பன் தெருவில் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுபற்றி தகவலறிந்து அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் திரண்டனர். 'சர்வே' எடுக்க முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தி.மு.க.வினருக்கும், த.வெ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இதில் 5 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவெகவினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"அமைதியான முறையில் தேர்தல் வேலைக்காக மக்களை தவெகவினர் சந்தித்து வந்தனர். இன்னும் பரப்புரையை ஆரம்பிக்கக் கூட இல்லை. சந்திப்பதே தவறு என்கிறார்கள். இதற்கே திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. முக்கியமாக இங்கு இருக்கும் அமைச்சர். அந்தளவுக்குப் பயக்கிறார் என்றார் தொகுதியின் நிலைமை என்ன என்பது அனைவருக்கும் புரியும். மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் தான் வன்முறையை கையில் எடுப்பார்கள். மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் தான் காசை நம்புவார்கள். மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் தான் ரவுடிசத்தை கையில் எடுப்பார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் எங்களைப் பாதிக்காது. நாங்கள் மக்களுடைய வீட்டுக்கு இன்னும் தைரியமாகப் போவோம். தலைவர் கிட்டப் பேசிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். இதே நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் செல்வோம். முடிந்தால் சேகர்பாபுவை என் மீது கை வைக்கச் சொல்லுங்கள். முடிந்தால் என் சட்ட மேல் கை வைக்க சொல்லுங்க. நாங்கள் ரொம்ப அமைதியாக அறவழியில் இருக்கிறோம். இந்த ஆட்சியை மாற்றி மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறோம். ஆனால், திரும்ப திரும்ப கை வைத்தால் இளைஞர் படை உங்கள் வீடு தேடி வரும். அதை மட்டும் மறந்துவிடாதீர்கள். அகிம்சை வழியில் பதிலடி கொடுப்போம்” என்றார்.