பென்னாகரம்:
வார விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று உற்சாகம் அடைந்தனர்.
தொடர்ந்து முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை குடும்பத்துடன் சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மீன் வறுவல் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் விற்பனை ஜோராக நடந்தது.
தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் மோர், கரும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனையும் களை கட்டியது. சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.