தமிழக செய்திகள்

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க தமிழகத்துக்கு 234 பொது பார்வையாளர்கள் வருகை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க தமிழகத்துக்கு 234 பொது பார்வையாளர்கள் வரவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது.

சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது கண்டிப்பாக 5 விவிபாட் எந்திரங்களில் உள்ள சீட்டுகளும் எண்ணப்பட வேண்டும். தபால் ஓட்டுகள், வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வாக்குகள் ஆகியவற்றை எண்ணி முடித்தபிறகுதான் விவிபாட் சீட்டுகள் எண்ணப்படும்.

அதற்கான விவிபாட் எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். அப்போது வேட்பாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள் உடன் இருப்பார்கள். தேர்வு செய்யப்பட்ட விவிபாட் எந்திரங்களில் இருக்கும் சீட்டுகளுடன், அதற்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகி இருந்த ஓட்டுகள் சரிபார்க்கப்படும். இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது, அந்த தொகுதியில் அடங்கியிருக்கும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபாட் எந்திரங்கள் சரிபார்த்தலுக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையின்போது, ஏதாவது ஒரு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாமல் போய்விட்டால், அதுவும், அதனுடன் இணைந்திருந்த விவிபாட் எந்திரமும் தனியாக வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், அதிக ஓட்டு வாங்கிய வேட்பாளர் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கைக்கும், அவருக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுகளின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் கணிக்கப்படும்.

செயல்படாத வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியிருந்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக, வேட்பாளர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் காணப்பட்டால், அந்த செயல்படாத வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைந்திருந்த விவிபாட் எந்திரத்தில் இருக்கும் சீட்டு எண்ணப்படாது. ஆனால் உதாரணமாக, அந்த செயல்படாத வாக்குப்பதிவு எந்திரத்தில் 600 ஓட்டுகள் பதிவாகி இருந்தநிலையில், வேட்பாளர்களுக்கு இடையேயான ஓட்டு வித்தியாசம் 600-க்கும் குறைவாக இருந்தால், விவிபாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

மே 2-ந் தேதி காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அலுவலர்கள் வந்துவிடுவார்கள். அங்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வருவது, எண்கள் அளிப்பது போன்ற ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு 8.30 மணிக்கு தபால் ஓட்டுகளை எண்ணத் தொடங்குவார்கள். வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள முதல் சுற்று ஒட்டுகளின் எண்ணிக்கையும் தொடங்கிவிடும்.

வாக்கு எண்ணும் மையங்களில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடம் அளிக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கையின்போது கேமராக்கள் மூலம் காட்சிகள் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையை வெளியில் வைக்கப்பட்டுள்ள திரையிலும் காண முடியும்.

முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி, பொதுப் பார்வையாளர் ஆகியோரின் கையெழுத்து பெறப்பட்டு முடிவை அறிவிப்பார்கள். அது திரையில் ஒளிபரப்பப்படும்.

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பாதுகாப்பு மீறப்படவில்லை. பாதுகாப்பு அறைக்கு அருகே வாகனங்கள் வருவதை மிகவும் கண்டிப்புடன் கவனிப்போம்.

மே மாதமும் ஊரடங்கு நீடித்தால், வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும், தேதி மாற்றம் இருக்குமா என்று கேட்டால், கொரோனா தொடர்பாக மாநில அரசு என்ன நடைமுறையை மேற்கொள்கிறதோ அதை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் ஆகும். அதுபற்றி முடிவு செய்ய இன்னும் நாட்கள் இருக்கின்றன.

ஒரு தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர் வீதம் 234 பேர், வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பு வருவார்கள். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு பார்வையாளர் வருவார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்காக ஆன்லைன் மூலம் நடந்துகொண்டிருக்கிறது.

தேர்தல் நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களை உரிய ஆவணங்களைக் காட்டினால் திருப்பி அளித்துவருகிறோம்.

நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் செலவைத் தாண்டி வேட்பாளர் யாரும் செலவு செய்திருந்தால், அவருக்கு விளக்க நோட்டீசு அளித்து விளக்கம் கோரப்படும். இது வாக்கு எண்ணிக்கை முடிந்து 30 நாட்களுக்கு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு