தமிழக செய்திகள்

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

புராணசிங்கு பாளையத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருபுவனை

புராணசிங்கு பாளையத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏரிகளில் ஆக்கிரமிப்பு

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து புராணசிங்கு பாளையம் அருகில் ஏரிக்கரை உள்ளது. அப்பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் ஏரிகளுக்கு மழை நீர் செல்லவும் அருகில் உள்ள குளங்கள் நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை முன்வைத்து மதகடிப்பட்டு - திருக்கனூர் சாலையில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அங்கு வாகனங்கள் செல்லமுடியாத வகையில் தடிகளால் தடுப்புகளை ஏற்படுத்தி திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமரச பேச்சு

இதுபற்றி அறிந்ததும் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வருவாய் அதிகாரிகள் நேரில் வந்து இந்த நீர்நிலைப் பகுதிகளில் அளவீடு செய்து தூர்வார நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வில்லியனூர் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய் அதிகாரிகள் அங்கு வந்து நீர்நிலைகளை அளந்து பதிவுகளை தயார் செய்தனர்.

இதுகுறித்து மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கு தாசில்தார் கார்த்திகேயன் தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார்.

போக்குவரத்து பாதிப்பு

அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை வருவாய் துறை அதிகாரிகள்அளந்து குறிப்புகள் எடுத்தபோது 5-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிய வந்தது. வருவாய் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைகளை கண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு