தமிழக செய்திகள்

சென்னையில் 3-வது நாளாக தொடரும் சோகம்: வீடுகளில் புகுந்த மழைநீரில் தத்தளிக்கும் மக்கள்

சென்னையில் வீடுகளில் புகுந்த மழைநீரில் சிக்கி மக்கள் தத்தளித்து வருகிறார்கள். அடுத்துவரும் நாட்கள் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சத்தில் புலம்பி வருகிறார்கள்.

சென்னை,

வங்க கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த 8-ந் தேதி பெருமழை பொழிந்தது. குறிப்பாக சென்னையில் போதும்... போதும்... என்கிற அளவுக்கு விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 23 செ.மீ. மழை பெய்தது. இந்த பெருமழையால் சென்னை பெரும் அவஸ்தையை சந்தித்தது.

மாநகர சாலைகளில் வெள்ளமாய் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தெருக்களில் குளம்போல மழைநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து குடியிருப்புகளை தீவாகவே மாற்றியது. அந்தவகையில் வேளச்சேரி, நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, தண்டையார்பேட்டை, கே.கே.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, கொளத்தூர், கொரட்டூர், மந்தைவெளி, அசோக்நகர் போன்ற பகுதிகளில் பெரும்பாலானோரின் வீடுகளில் மழைநீர் புகுந்திருக்கிறது.

வடியாத வெள்ளநீர்

வடசென்னையின் பல பகுதிகளிலும், புறநகரின் அனேக பகுதிகளிலும் பலரது வீடுகளில் அழையா விருந்தாளியாக நுழைந்த மழைநீர், அடம்பிடித்து போக மறுக்கிறது. இவ்வாறு மக்களின் இயல்பு வாழ்க்கை தொலைந்துபோயிருக்கிறது.

இந்தநிலையில் சென்னையில் நேற்று முன்தினம் அவ்வப்போது லேசாக மழை பெய்தது. பெருமழை பெய்யவில்லை என்றாலும், பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை. பல சுரங்கப்பாதைகளில் மழைநீர் சூழ்ந்திருந்தது. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கோவில் தெப்பங்குளங்கள் என திரும்பும் திசையெங்கும் மழைநீர் நிரம்பி வழிந்தது. அதேவேளை மின் மோட்டார்கள் கொண்டு மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி, குடிநீர்-கழிவுநீர் அகற்று வாரியம், தீயணைப்பு-மீட்புத்துறை என அதிகாரிகள் பம்பரமாய் சுழன்று செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.

தவிக்கும் மக்கள்

இதற்கிடையில் 3-வது நாளான நேற்று காலை வானம் சற்று தெளிவானது. சூரிய வெளிச்சம் பூமியில் படாவிட்டாலும், சூரியன் இருப்பதையாவது பார்க்க முடிந்தது. அவ்வப்போது ஓரிரு நிமிடங்கள் லேசாக பெய்வதும், அடுத்து சில வினாடிகள் பெருமழையாக மாறி பின்னர் ஓய்வெடுப்பதுமாக நேற்றைய தினம் மழை கண்ணாமூச்சி ஆடியது. இதன் காரணமாக 3-வது நாளாக புரசைவாக்கம், தியாகராயநகர் உள்பட மாநகரில் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியாத நிலையே இருக்கிறது. இதனால் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சொல்லொண்ணா சிரமத்தில் உள்ளனர்.

ஏற்கனவே கொரோனா பிரச்சினையால் வாழ்வாதாரம் இழந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் சூழலில் இந்த பெருமழை பேரிடியாக விழுந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கடந்த 3 நாட்களாக மழைநீர் சூழ்ந்த வீடுகளில் குளிருக்கும், கொசுக்கடிக்கும் இடையே மக்கள் நிம்மதியை தொலைத்து தவித்துவருகிறார்கள். பலர் மழைக்கு பயந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிலர் உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.

நீர் நகரமான சென்னை

வேளச்சேரி, பள்ளிக்கரணை, புழுதிவாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சேர்ந்து வரும் பாம்புகள், தவளைகள், பூரான்கள் உள்ளிட்ட பூச்சிகளும் கூடுதல் தொல்லையை அளித்துவருகின்றன. பகுதிவாசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளன.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மழைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது சென்னை மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கால தொடக்கமே மக்களின் நிம்மதியை பறிப்பதாய் அமைந்துவிட்டது. இன்னும் அதி கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி இருப்பதால் வரும் நாட்கள் எப்படி இருக்கப்போகிறதோ என்ற கலக்கத்தில் மக்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய சூழலில் நீர் நகரமாக சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...