காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று காரில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவரது மனைவி தனக்கு டிரைவிங் கற்றுத்தரும்படி கேட்டுள்ளார்.
இதனால் அவரது கணவர், மனைவிக்கு கல்லல் தெப்பக்குளம் பகுதியில் வரும்போது கார் ஓட்ட கற்றுக்கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அவரது மனைவி பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை வேகமாக மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தெப்பக்குளத்தில் இருந்த படித்துறை வழியாக இறங்கி தண்ணீரில் விழுந்தது. தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிகளவு இருந்தது.
இதனால் கார் லேசாக மிதந்த நிலையில் உடனடியாக கதவை திறந்து கணவன், மனைவி இருவரும் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் கார் மிதந்தபடியே தெப்பக்குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றது. இதுகுறித்து அறிந்த காரைக்குடி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று காரை மீட்டனர்.