கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பாக்கு தோப்பில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டபோது சோகம்: தேனீக்கள் கொட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

இளைஞர் பாக்கு தோப்பில் நண்பர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டபோது திடீரென தேனீக்கள் அவர்களை கடித்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே தாசரஅள்ளி கிராமத்தை சேர்ந்த அம்மாசி மகன் அஜித்குமார் (29 வயது). இவரது மனைவி சாயாசத்ரி. இவர்களுக்கு அஜித்தா என்ற (4 வயது) மகள் உள்ளார். அஜித்குமார் அரூரில் வீட்டுக்கடன் வழங்கும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் அஜித்குமார், அவரது நண்பர்கள் ராம்குமார், அகிலன் ஆகியோருடன் பெரியார்நகர் பகுதியில் உள்ள பாக்கு தோப்பில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென தேனீக்கள் அவர்களை கடிக்க தொடங்கியது. இதையடுத்து ராம்குமார், அகிலன் ஆகியோர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

ஆனால் அஜித்குமாரை தேனீக்கள் கொட்டின. இதில் அங்கேயே அஜித்குமார் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது அஜித்குமார் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மொரப்பூர் போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT