சென்னை,
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே ஓடுவதால் அவற்றில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. பஸ்கள் ஓடாததால் மின்சார ரெயில்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகளவில் உள்ளது.
இந்த நிலையில், இந்த வேலைநிறுத்தத்துக்கு எதிரான பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்ததோடு, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு அவர்களுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இதனை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்ட முடிவில் இன்று முதல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று கூறியுள்ளார்.
'அவர் தொடர்ந்து கூறும்பொழுது, பாதியில் பேருந்துகளை நிறுத்தி விட்டு சென்றவர்கள், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப நாளை வரை அவகாசம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். வேலை நிறுத்தம் செய்து வரும் தெழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு பேக்குவரத்து துறை நேட்டீஸ் அனுப்பி உள்ளது.
#MRVijayabaskar | #disciplinaryaction