தமிழக செய்திகள்

ஜேடர்பாளையம் அருகே தொடரும் வன்முறை சம்பவம்:2 ஆயிரம் வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

ஜேடர்பாளையம் அருகே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மீண்டும் வெட்டி சாய்க்கப்பட்டன. இதையடுத்து மாமநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பரமத்திவேலூர்

பெண் கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வி.கரபாளையம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

இதையடுத்து வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், பள்ளி பஸ் உள்ளிட்டவைகளுக்கு தீ வைப்பு, குளத்தில் விஷம் கலந்தது என தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன. கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மீது மர்மநபர்கள் மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீ வைத்தனர். இதில் தொழிலாளி ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் மீண்டும் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்களை வெட்டினர். இதற்கிடையே இளம்பெண் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான பேலீசார் விசாரணை நடத்தினர்.

10 பேர் கைது

இதனிடையே கடந்த ஆகஸ்டு மாதம் ஜேடர்பாளையம் அருகே சின்னமருதூர் பகுதியில் எல்.ஐ.சி. முகவர் சவுந்தர்ராஜன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தில் நடப்பட்டு இருந்த 2,800 பாக்கு மரங்கள் மர்மநபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாழை மரங்கள்

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த நல்லசிவம் (60), அவரது சகோதரர் தர்மலிங்கம் (54) ஆகியோரது தோட்டத்தில் இருந்த சுமார் 1,800-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், அதேபகுதியை சேர்ந்த வக்கீல் சுப்பிரமணியின் (68) தோட்டத்தில் இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்களையும், புலவர் சுப்பிரமணி (70) தோட்டத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

பின்னர் விஸ்வநாதனின் (60) பாக்குமர தோப்பிற்கு சென்ற மர்மநபர்கள் ஒரே ஒரு பாக்கு மரத்தை மட்டும் வெட்டி உள்ளனர். மேலும் பாக்கு மரங்கள் பெரிதாக இருந்ததால் வெட்ட முடியாததால் அங்கிருந்து அவர்கள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட கலெக்டர் உமா, சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு, சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.

வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு