மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒரு லாரி பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு திருச்சி வழியாக தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார்.
திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே சிலையாத்தி என்ற இடத்தில் நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள அய்யன் வாய்க்காலில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சந்திரசேகர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.