தமிழக செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் புகார்தாரரின் வாதத்தைக் கேட்காதது ஏன்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் புலன்விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெ.நிஷாபானு மற்றும் என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலன்விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை தமிழக அரசுக்கு கிடைக்கப்பெற்றதா என்பது குறித்து பதிலளிக்க தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலன்விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை தமிழக அரசுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று பதிலளித்தார்.

அப்போது மனுதாரர் ஹென்றி திபேன் ஆஜராகி, வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தனது புகார் குறித்து பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஹென்றி திபேனின் புகார் பற்றிய பதிவுகள் இடம்பெறாதது ஏன்? எனவும், புகார்தாரரின் வாதத்தைக் கேட்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி, இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்