சென்னை,
தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்குகிறது. ஆட்சியில் பங்கு என்ற அதிரடி அறிவிப்புடன் கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தாலும் இன்னும் த.வெ.க. கூட்டணிக்கு யாரும் வரவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி அடையும் கட்சிகள் த.வெ.க. பக்கம் திரும்பும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அதற்கு ஒருபடி மேலேபோய், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 அறிவிப்புகளை 2 கட்டங்களாக வெளியிட்டுவிட்டது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் பரிந்துரைகளை தெரிவிக்க இணையதளம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது. இதன்படி tvkmanifesto2026.com என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான த.வெ.க.வின் இணையதளம் தற்போது முடங்கியுள்ளது. இதையடுத்து மின்னஞ்சல் வாயிலாக பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என த.வெ.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை இணையத்தளத்தின் வாயிலாக கழகத்திற்குத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையதளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாக பயன்படுத்தப்படுவதால் ஸ்தம்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம். tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.