சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.
இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த படைக்கு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற பெயரை ஐ.ஜி. பவானீஸ்வரிதான் சிபாரிசு செய்துள்ளார். அவருடைய சிபாரிசை ஏற்று, முதல்-அமைச்சர் விஜய் இந்த பெயரை சூட்டியதோடு மட்டுமல்லாமல், பவானீஸ்வரியை இந்த படைக்கு ஐ.ஜி.யாகவும் நியமித்துள்ளார்
இந்த நிலையில் சிங்கப்பெண் அதிரடிப்படை பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? வெட்கக்கேடு!
கவனம் செலுத்த வேண்டும்
"நான் உங்கள் அண்ணன்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்-அமைச்சர் விஜய், முதலில் இப்புகாரை தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பர திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழக பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்!
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.