தமிழக செய்திகள்

வருசநாடு அருகே இரு தரப்பினர் மோதலில்கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் :5 பேர் படுகாயம்

வருசநாடு அருகே இரு தரப்பினர் மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

 குடும்ப பிரச்சினை

வருசநாடு அருகே வைகை நகரை சேர்ந்தவர் கவின் (வயது 33). இவரது மனைவி நிவேதா (30). இந்த தம்பதிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறின்போது, நிவேதா கோபித்து கொண்டு குழந்தையுடன் தர்மராஜபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கவின் மற்றும் அவரது பெற்றோர் தர்மராஜபுரத்தில் உள்ள நிவேதா வீட்டிற்கு சென்று எனது குழந்தையை எப்படி தூக்கிவிட்டு வரலாம் என தகராறு செய்தனர். மேலும் அவர்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு வைகை நகருக்கு வந்தனர். இதையடுத்து அன்று மாலை நிவேதாவின் தந்தை ஜெயக்குமார் மற்றும் உறவினர்கள் மீண்டும் வைகை நகருக்கு சென்று குழந்தையை தூக்கி செல்ல முயன்றனர்.

இரு தரப்பினர் மோதல்

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது ஒருவரையொருவர் கத்தி, கம்பு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க தொடங்கினர். இதில் கவினின் உறவினர்களான சின்னமனூர் ஓவுலாபுரத்தை சேர்ந்த நல்லசாமி (28), சிலம்பரசன் (29), மற்றொரு தரப்பை சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி செல்வி (40), மகன் கோகுல் (29) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் நல்லசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நல்லசாமி கோமா நிலைக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், ஜெயக்குமார், கோகுல், சிலம்பரசன் உள்ளிட்ட 8 பேர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.