தமிழக செய்திகள்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையங்கள் - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் 11.26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5.35 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் மற்றும் 11.26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையங்களை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து புதிய பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பினார். இது தொட்ரபாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 0.76 ஏக்கர் பரப்பளவில் 5.35 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலைய கட்டிடம் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்பேருந்து நிலையத்தில் 2 கடைகள், 1 உணவகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு கூடம் மற்றும் ஓய்வறை, நேரக் காப்பாளர் அறை மற்றும் பாதுகாப்பு அறை, ஜெனரேட்டர் அறை, பருவகால மற்றும் பள்ளி பயணச்சீட்டு வழங்கும் மையம், போக்குவரத்துத்துறை அலுவலகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிகள் இருக்கை வசதிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், 2 நடைமேடைகள், 6 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் வடபழனி ஆகிய இடங்களுக்கு 4 வழித்தடங்களில், 25 பேருந்துகள், 127 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் 1.31 ஏக்கர் பரப்பளவில் 11.26 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையத்தில் 4 கடைகள், 1 உணவகம், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு பகுதி, நேரக் காப்பாளர் அறை மற்றும் பாதுகாப்பு அறை, ஜெனரேட்டர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான உணவருந்தும் இடம், பருவகால மற்றும் பள்ளி பயணச்சீட்டு வழங்கும் மையம், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள், 100 எண்ணிக்கையிலான பயணிகள் இருக்கை வசதிகள் மற்றும் 2 நடைமேடைகள், 16 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சதுக்கம், தீவுத்திடல், ஐயப்பன்தாங்கல், தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு 11 வழித்தடங்களில், 94 பேருந்துகள், 538 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், அ.வெற்றி அழகன், ஜெ.ஜெ.எபிநேசர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.