தமிழக செய்திகள்

சென்னை மே தின பூங்காவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் ‘மகிழ் கபே’ - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் 7 இடங்களில் ‘மகிழ் கபே’ அமைக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மே தின பூங்காவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினரின் ‘மகிழ் கபே’ கடையினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“முத்தமிழறிஞர் கலைஞர் 1989 ஆம் ஆண்டு, தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கினார். சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி, வங்கிக் கடன் இணைப்புகள், பூமாலை வணிக வளாகங்கள், மணிமேகலை விருதுகள் என எண்ணற்ற திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் முன்னேற்றப் பாதையை நோக்கி சென்றது.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற 2021 முதல் இன்று வரை 6 லட்சத்து 23 ஆயிரத்து 639 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 81 லட்சத்து 5 ஆயிரத்து 877 மகளிருக்கு 1 லட்சத்து 44 ஆயிரத்து 91 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

துணை முதல்-அமைச்சர் 2024-25-ஆம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின்போது சட்ட மன்றத்தில் சென்னை பெருமாநகராட்சியில் 7 இடங்களில் ‘மகிழ் கபே’ அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தொல்காப்பிய பூங்கா, தலைமை செயலகம், கில் நகர் பூங்கா, ஜெய்நகர் பூங்கா, அறிஞர் அண்ணா பூங்கா, மே தின பூங்கா மற்றும் தமிழ்நாடு மகளிர் மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலக வளாகம் ஆகிய 7 இடங்களில் மகிழ் கபேவும் சுமார் ஒவ்வொன்றும் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் 24.10.2025 அன்று பணிகள் நிறைவு பெற்ற தொல்காப்பிய பூங்காவில் அமைந்துள்ள மகிழ் கஃபேவினை திறந்து வைத்தார். மகிழ் கபேவை நிர்வகிக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ‘மகிழ் கபே’ செயல்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு தர சான்றிதழ் பெற்று தரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இடத்திலும் 3 முதல் 5 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இந்த மகிழ் கபேவினை செயல்படுத்தி வருகின்றனர். நடைமுறை செலவினங்கள் மற்றும் மகிழ் கபே நிறுவன செலவினங்களுக்காக சுய உதவிக்குழுகளுக்கு வங்கிகள் வாயிலாக கடன் இணைப்பு பெற்றுதரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.2.2026) சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மே தின பூங்காவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்கு குழுவினரின் ‘மகிழ் கபே’ கடையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயலகம், கில் நகர் பூங்கா, ஜெய்நகர் பூங்கா, அறிஞர் அண்ணா பூங்கா மற்றும் தமிழ்நாடு மகளிர் மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலக வளாகம் ஆகிய மேலும் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘மகிழ் கபே’ கடைகளையும் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.