தமிழக செய்திகள்

கைகளில் வலி ஏற்பட்டு விளையாட முடியாததால் வருத்தம்: சிலம்ப வீராங்கனை எடுத்த விபரீத முடிவு

கை வலியால் சிலம்பம் சுற்ற முடியாமலும், பள்ளிக்கு செல்ல முடியாமலும் மாணவி அவதிப்பட்டு வந்துள்ளார்.

மதுரை சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் தானியலட்சுமி என்ற மகாலட்சுமி (16 வயது). மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர், சிறுவயதிலேயே சிலம்பம் பழகி போட்டிகளில் பங்கேற்றார். மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று பல்வேறு பரிசுகளை பெற்று சாதித்தவர்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக தானியலட்சுமிக்கு கைகளில் வலி இருந்துள்ளது. இதனால், சிலம்பம் சுற்ற முடியாமலும், பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கும் சில நாட்கள் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர், வீட்டில் இருந்தபடி மருந்துகள் எடுத்து வந்தார். கைகளில் வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சிலம்பம் விளையாட முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் திடீரென தூக்குப்போட்டு தானியலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவலறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமர் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.