தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக் கட்டணம் வசூல்: வாகன ஓட்டிகள் வரவேற்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலி சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர்.

தடையற்ற சுங்கக்கட்டணம் வசூல்

தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சுங்கச்சாவடியில் தடுப்பு அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தடையற்ற சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் தடுப்புகள் எதுவும் இல்லாமல் தானியங்கி கேமராக்கள் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட் மற்றும் பாஸ்டேக் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகள் வரவேற்பு

இந்த தடையற்ற தானியங்கி சுங்கக்கட்டணம் நடைமுறை தமிழகத்தில் முதல் முறையாக செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் தற்போது வாகனங்கள் எந்தவித காத்திருப்பும் இல்லாமல் தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டு செல்வதால் அந்த பகுதியில் வாகன நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக்கட்டணம் வசூல்

இதற்கிடையே தற்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும்

சுங்கச்சாவடிகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் உள்ள கேமராக்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்டேக், வாகனங்களின் பதிவு எண்ணை ஒப்பிட்டு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்கில் இருந்து சுங்கக்கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.

இதனால் வழக்கமான சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். தமிழகத்தில் தடையில்லா சுங்கக்கட்டண வசூல் முறை பரனூரை தொடர்ந்து நெமிலி சுங்கச்சாவடியில் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு மடங்கு அபராதம்

விரைவில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியிலும் சோதனை ஓட்டங்களுக்கு பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. பாஸ்டேக்கில் போதுமான பணம் இல்லை என்றாலோ செல்லாத பாஸ்டேக் வைத்திருந்தாலோ சுங்கக்கட்டணத்தை போல் இருமடங்கு அபராதம் விதித்து மின்னணு நோட்டீஸ் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT