தமிழக செய்திகள்

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்; சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆண்டுக்கொருமுறை மின்கட்டணத்தை உயர்த்தப்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் உற்பத்தியைப் பெருக்கி, வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி எண் 220-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சரே?

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு அனல் மின் நிலையங்களில் இருந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு யூனிட் மின்சாரம் கூட மக்கள் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படவில்லை என்பதே உங்கள் அவல ஆட்சிக்கான ஆதாரம். இந்த லட்சணத்தில் மின் உற்பத்தியைப் பெருக்க நீங்கள் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போகிறீர்களாக்கும்?

ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆண்டுக்கொருமுறை மின்கட்டணத்தை உயர்த்தியது மற்றும் இந்தியாவிலேயே அதிக இழப்புகளைச் சந்தித்த மின்வாரியங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்றியது ஆகியவற்றைத் தவிர மின்சாரத் துறையில் வேறு எந்த சாதனைகளையும் செய்யாத உங்கள் ஊழல் அரசால், மக்கள் நிதிச்சுமைக்கு ஆளானது தான் மிச்சம். இப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோத அரசை அரியணையிலிருந்து அகற்ற தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.