மதுரை,
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு அனுமதித்தது. அதன்படி அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தன.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் நேற்று முன்தினம் நடக்க இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு தை மாதம் 4-ந் தேதியான நேற்று கோலாகலமாக நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக முன்பதிவு அடிப்படையில் 300 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதுபோல் ஆன்லைன் பதிவு அடிப்படையில் காளைகளை களம் இறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
முன்கூட்டியே தொடங்கியது
இம்முறை அதிக அளவிலான காளைகளை களம் இறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், முன்கூட்டியே அதாவது காலை 6.45 மணிக்கே போட்டி தொடங்கிவிட்டது. அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடபட்டன.
சிலிர்ப்பூட்ட வைத்தது
மதுரை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான காளைகள் அலங்காநல்லூருக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு பிடித்தனர். இதனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம் ஆரவாரமானது.
பல காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களை நெருங்க விடாமல் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன. ஆக்ரோஷமாக ஓடிவந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கிய காட்சிகள் சிலிர்ப்பூட்ட வைத்தது. காளைகளுடன் மல்லுக்கட்டியதில் பல காளையர்கள் காயம் அடைந்தனர்.
பல்வேறு பரிசுகள்
திமிறிய காளைகளை அடக்கி ஆண்ட காளையர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், செல்போன், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கிரைண்டர், மிக்சி, பீரோ, கட்டில், மெத்தை, எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அடுத்த சுற்றிலும் காளைகளை பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பிற்பகல் 2.30 மணி வரை 717 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு இருந்தன. அதன் பின்னர் ஜல்லிக்கட்டு இன்னும் பரபரப்பாகியது. சிறந்த மாடுபிடி வீரர்கள் அடுத்தடுத்த சுற்றில் களம் கண்டதால் காளைகளும், வீரர்களுக்குமான போட்டி விறுவிறுப்புடன் நகர்ந்தது.
1,020 காளைகள்
கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு மாலை 5.45 மணி வரை நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் இதுவரை இல்லாத வகையில், ஆயிரம் எண்ணிக்கையை கடந்து, முதன் முறையாக 1,020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 21 காளைகளை அடக்கிய மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்ற வீரர் முதல் இடம் பிடித்தார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார் என்ற வீரர் 19 காளைகளை பிடித்து 2-வது இடமும், சித்தாலங்குடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 13 காளைகளை அடக்கி 3-வது இடமும் பிடித்தனர். அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
காளைக்கும் கார் பரிசு
களத்தில் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வளர்த்து வரும் காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் வளர்க்கும் காளைக்கு 2-வது பரிசாக மோட்டார் சைக்கிளும், குலமங்கலம் வக்கீல் திருப்பதியின் காளைக்கு 3-வது பரிசாக நாட்டுப்பசுவும், கன்றும் வழங்கப்பட்டன.
இந்த பரிசுகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கி வாழ்த்தினர். இதற்கிடையே நேரமின்மை காரணமாக அவிழ்த்துவிடாத சுமார் 200 காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
45 பேர் காயம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் போலீஸ்காரர் என மொத்தம் 45 பேர் காயம் அடைந்தனர். அதில் 26 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். லேசான காயங்கள் அடைந்தவர்களுக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.