சென்னை
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் ரயிலை மறித்தும், சென்னையில் சாலை மறியலிலும் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் 30 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர், திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சைதையில் மா.சுப்பிரமணியன் தலைமையில் அண்ணாசாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு அருகில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர். சென்னை தெற்கு பகுதியில் மட்டும் 11 இடங்களில் போராட்டம் நடந்தது.
தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் தாசபிரகாஷ் பூந்தமல்லி சாலையில் மறியல் நடந்தது
எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே கே.கே.நகர் தனசேகரன், கவிஞர் காசிமுத்துமாணிக்கம், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, கண்ணன், துரைராஜ் உள்பட 200 பேர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.
வேளச்சேரியில் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., சோழிங்கநல்லூரில் அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., பெருங்குடி ரவி ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். ஆலந்தூரில் குணாளன், ரங்கநல்லூரில் சந்திரன், கொட்டிவாக்கத்தில் பாலவாக்கம் விசுவநாதன், மதியழகன், தலைமையில் மறியல் நடந்தது. சென்னை தி.மு.க. தெற்கு மாவட்டத்தில் மட்டும் 11 இடங்களில் மறியல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைதாகி உள்ளனர்.
இன்று கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சட்டமன்ற தொகுதி வாரியாக மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை கண்டித்து தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை கண்டித்து கோவை சிங்காநல்லூர் ரயில்நிலையத்தில் ரயிலை மறித்து திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடலூர் - திருச்சி பயணிகளை மறித்து புதிய தமிழகம் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் படுத்துக்கொண்டும், ரயிலின் மீது ஏறியும் புதிய தமிழகம் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் மட்டுமின்றி திருச்சியில் உள்ள இதர ரயில் நிலையங்களிலும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
திருவாரூர் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதை கண்டித்து கோவை பீளமேடு பகுதியில் முருகேசன், சிங்கை சதாசிவம் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.