கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஊட்டி பைக்காரா ஏரியில் பெட்ரோல் படகு பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படும் - ஐகோர்ட்டில் சுற்றுலாக் கழகம் உத்தரவாதம்

ஊட்டி பைக்காரா ஏரியில் மின் மோட்டார் படகுகள் பயன்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வனம், வனவிலங்கு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு டிவிசன் பெஞ்சுக்கு உதவும் நபர்களாக வக்கீல்கள் செவணன் மோகன், சந்தானராமன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், ''ஊட்டி பைக்காரா ஏரியில் படகு சவாரிக்கு, பெட்ரோல் மோட்டார் படகுகளை பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்பட்டு, விலங்குகள் பாதிக்கப்படுவதுடன், பெட்ரோல் கசிவு காரணமாக, ஏரி நீர் மாசடைகிறது'' என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து இந்த ஏரியை பராமரிக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ''படகு சவாரிக்காக பெட்ரோல் மோட்டார் படகுகள் பயன்படுத்தப்படுகிறது. டீசல் மோட்டார் படகுகளை பயன்படுத்துவதில்லை. அடர்ந்த வனப் பகுதிக்குள் படகு சவாரி நடத்தப்படுவது இல்லை. அதேநேரம், பெட்ரோல் படகுகளால் ஏரி மாசுபடுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

எதிர்காலத்தில் பெட்ரோல் மோட்டார் படகு பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு, மின் மோட்டார் படகுகள் பயன்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். திடீரென படகு சவாரியை நிறுத்தினால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள். அதுமட்டுமல்ல வருவாய் இழப்பும் ஏற்படும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.