திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் தென்மாவட்டங்களில் பழமையானது இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றியதால் சுயம்புலிங்கசுவாமி என வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவிலில் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா தைபூச திருவிழாக்கள் முக்கிய விழாக்களாகும் அப்போது இங்கு திரளான பக்தர்கள் கூடுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். இக்கோவிலின் முக்கிய விழாவான தை பூச திருவிழா சென்ற 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 9ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது பின்பு சுவாமி சந்திரசேகரர் மனேன்மணி அம்பிகை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக தேருக்கு அழைத்து வரப்பட்டார் பின்பு அவர்கள் தேரில் எழுந்தருளினர் காலை 9 மணிக்கு கோவில் பரம்பரை தர்மகர்த்தா தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது தேரின் மேல் கழுகு வட்டமிட்டது அதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என கோஷம் எழுப்பினர். முன்னதாக வினாயகர் சண்டிகேஷ்வரர் சிறிய தேரை பெண்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிவழியாக ஊர்வலமாக வந்து 10-45 மணிக்கு நிலைக்கு வந்தது.
அப்போது பெண்கள் குலவையிட்டு மகிழ்சியை தெரிவித்தனர். தேரோட்டத்தில் தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் ராஜகோபுர கமிட்டி துணைத்தலைவரகனகலிங்கம் கமிட்டி உறுப்பினர்கள் ராஜமணி, அழகானந்தம் திசையன்விளை தாசில்தார் செல்வகுமார் உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர் .
கொரோனா தெற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை சுவாமியை வாசலில் நின்று தரிசனம் செய்தனர். அர்சனை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை .முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டுக்கள் சமயசிங் மீனா, மதிவாணன் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.