சென்னை,
சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் மின்கல வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் விரைவில் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் நிலவரம் குறித்து பேசிய அவர், கோவிஷீல்டு தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கோவேக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தடுப்பூசியின் தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி தற்போது செலுத்தப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.