சென்னை,
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கி சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.
இதற்கிடையே, சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறாக சர்வதேச மையத்தை அமைக்கக்கூடாது என்றும், வேறு இடத்தில் கட்டடம் கட்டவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கட்டிடம் கட்ட ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அரசாணைக்கு எதிரான வழக்கில் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக" தெரிவித்தார். மேலும், ஜோதி தரிசனத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்று இடத்தில் யாகசாலை, நூலகம், நூலகம், முதியோர் இல்லம் கட்ட திட்டம் உள்ளதாகவும், சத்திய ஞானசபைக்கு சொந்தமான 71.24 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட உள்ளதாக தெரிவித்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.