ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி தினத்தந்தி தலையங்கத்தில் புள்ளி விவரங்களை தந்து உள்ளது.
19.7 சதவீதம் கடந்த ஆண்டை விட கர்நாடகாவிற்கு அதிகம். தமிழகத்திற்கு யானை பசிக்கு சோளப்பொரி வழங்கியது போன்று தான் திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
நீட் தேர்வு
ஆந்திராவில் சிறப்பு பொருளாதார அந்தஸ்து வழங்க நிதி தரவில்லை என்று கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினர் கடுமையாக போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழகத்திற்கு மக்களவையில் நாதி இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. அனைத்து துறைகளிலும் மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
நீட் தேர்வு அந்தந்த மாநில பாடத்தில் தான் நடத்த வேண்டும். ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நடத்துவது ஓரவஞ்சகமானது.
நிர்வாக சீர்கேடு
மேல் தட்டு மக்களுக்கு தான் வாய்ப்பாக உள்ளது. தமிழகத்தில் புதிதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திறக்க அனு மதிப்பது எதிர் காலத்தை பாழாக்க கூடியது.
பேருந்து கட்டண உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அரசு கவலைப்படவில்லை. போக்குவரத்து துறையில் நஷ்டம் ஏற்பட காரணம் ஊழலும், நிர்வாக சீர்கேடும் தான்.
சட்டமன்றத்தில்...
கல்வி துறை மிகுந்த கவலையை தருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் பணம் பெற்று நடக்கிறது. பணியில் உள்ள நீதிபதி, கல்வி துறையில் நேர்மையான அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து, சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டது தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என பதில் அளித்தார்.