தமிழக செய்திகள்

ஆட்சியாளர்கள் திருக்குறள் அறிவது நல்லது குடியுரிமை திருத்த சட்டத்தை கூட வள்ளுவர் சொல்லி இருக்கிறார் கவிஞர் வைரமுத்து பேச்சு

ஆட்சியாளர்கள் திருக்குறள் அறிவது நல்லது. குடியுரிமை திருத்த சட்டத்தை கூட வள்ளுவர் மறைமுகமாக சொல்லி இருக்கிறார் என்று திருவள்ளுவர் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

சென்னை,

வெற்றித்தமிழர் பேரவையின் மகளிர் அணி சார்பில் திருவள்ளுவர் திருவிழா சென்னை அடையாறு எம்.ஜி.ஆர்.- ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பேராசிரியர்கள் பர்வீன் சுல்தானா, விமலா அண்ணாதுரை மற்றும் அனுகிரகா ஆதிபகவன் ஆகியோர் திருக்குறள் நெறி பற்றி சொற்பொழிவு ஆற்றினர். பாடகி மகதி திருக்குறள் பண்ணிசை பாடினார். த.செல்வாம்பிகா, கலைமதி ஆனந்த் ஆகியோர் குறள் கவிதையாற்றினர். மகாலட்சுமி மற்றும் திவ்யா குறளிசையாற்றினர். விழாவில் குறள் கவிதைகளும், குறள் வீதி நாடகமும், குறள் பறை இசையும் அரங்கேற்றப்பட்டன.

விழாவில், ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் காந்தி கிருஷ்ணா, கவிஞர்கள் முத்துலிங்கம், காசிமுத்து மாணிக்கம் மற்றும் பிருந்தா சாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

பாடப்புத்தகமாக ஒதுக்கப்பட்டது

திருக்குறள் மனிதத்தைச் சார்ந்து இருக்கிறதே தவிர எந்த மதத்தையும் சார்ந்து இருக்கவில்லை. உலகப் பொதுமறையாய் உயர்ந்து நிற்கும் அதன் பெருமையும் அதுதான்; உலகின் விளிம்பு வரை சென்று சேராத அதன் சிறுமையும் அதுதான். தமிழர் வாழ்வில் ஒட்டியும், ஒட்டாமலும் நிற்கிறது திருக்குறள்.

மனிதகுலத்தின் வாழ்வியல் போக்குவரத்துக்கு வழிவகுத்துக்கொடுத்த நமது திரண்ட அறிவான திருக்குறள் பாடப்புத்தகமாக ஒதுக்கப்பட்டதே தவிர வாழ்க்கைச் சட்டமாக வனையப்படவில்லை. திருக்குறளின் பெருங்கூறுகள் அன்றாட வாழ்வின் நெறிகளாக கொண்டாடப்பட வேண்டும்.

திருக்குறள் நிகழ்காலத்தோடும் பயணிக்கிறது. இன்று உலகத்தைக் கொரோனா என்ற நச்சுயிரி (வைரஸ்) அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. அதற்கான தீர்வும் திருக்குறளில் சொல்லப்பட்டு இருக்கிறது. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்கிறார் திருவள்ளுவர். ஒரு நோயின் ஆதிமூலம் அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்கிறார்.

குடியுரிமை சட்டம்...

குடியுரிமை திருத்த சட்டத்தைக்கூட வள்ளுவர் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லி இருக்கிறார். ஒரு செயல் அளவுக்கு மீறிப்போனால் ஆபத்தை உண்டாக்கும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். மயிலிறகு போன்ற பொருளைக்கூட அளவுக்கு மீறி ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். எனவே ஆட்சியாளர்கள் திருக்குறள் அறிவது நல்லது.

இந்த திருக்குறள் திருவிழாவில் இரண்டு வயது குழந்தை முதல் எழுபது வயது தாய்மார்கள் வரை மேடையில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழர்களின் ஈராயிரமாண்டுப் பேரறிவை பெண்ணியலுக்கும், மின்னியலுக்கும் கடத்துவதே எங்கள் நோக்கம். வள்ளுவர் எங்கள் அடையாளம்; திருக்குறள் எங்கள் அறிவாழம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பானுமதி வரவேற்று பேசினார். முடிவில் ஆனந்தி நன்றி கூறினார்.

மேடையில் பங்கேற்ற 58 பெண்களுக்கு கவிஞர் வைரமுத்து திருக்குறள் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்